இலவுகாத்த கிளியாக மாறிய காங்கிரஸ்… பிரசாந்த் கிஷோர் முடிவுக்காக வெயிட்டிங்கில் சோனியா காந்தி…? பரபரப்பில் தேசிய அரசியல்..!!
Author: Babu Lakshmanan16 April 2022, 6:25 pm
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முதன்முதலாக, கடந்த 2014ம் ஆண்டு பாஜகவுக்குத்தான் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். பின்னர், 2015ம் ஆண்டு காங்கிரஸ் அங்கம் வகித்த மகா கூட்டணிக்காக பணியாற்றினார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.
ஆனால், கட்சியின் தலைவரும், பிகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அவர் அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர், தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார். இரு கட்சிகளும் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன.
இதைத் தொடர்ந்து, தன்னுடைய ஐபேக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அவர் விலகியது அரசியல் கட்சியினரிடையே புருவத்தை உயர்த்தச் செய்தது. அதேவேளையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சோனியா, ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இதனால், அவர் காங்கிரஸில் இணைவார் என்ற பேச்சு அடிபட்டது.
இந்த சூழலில், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்தபின் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சிக்கத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல், ராகுல் மற்றும் சோனியா காந்தியையும் வெளிப்படையும் விமர்சித்தார். அதுமட்டுமில்லாமல், தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூலமாக, பாஜகவை தோற்கடிக்க முடியாது என்றும், வலுவான தலைமையை உருவாக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேர்வது சந்தேகம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர் வேணுகோபால் உள்ளிட்டோருடன் பிரசாந்த் கிஷோர் திடீரென பேச்சுவார்த்தை நடத்தினார். 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை சரி செய்வது, அதை சீரமைப்பது குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், 2024ம் ஆண்டு மக்களை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக பிரசாந்த் கிஷோர் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு பதிலாக அரசியல் ஆலோசகராக செயல்படவே பிரசாந்த் கிஷோர் விரும்புகிறார். ஆனால் மே 2ம் தேதிக்குக்குள் பிரசாந்த் கிஷோர் தனது முடிவை தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம், என தெரிவித்தார்.
பாஜகவை எதிர்த்து போட்டியிடும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்து வருவதால், இந்தியாவில் அக்கட்சிக்கு மவுசு குறைந்து கொண்டே போகிறது. எனவே, கட்சியின் கட்டமைப்புகளை மாற்றி, வலிமையாக்க வேண்டிய நிலைக்கு சோனியா காந்தி தள்ளப்பட்டுள்ளார். எனவே, தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோரை எப்படியாவது காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்துவிட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் எண்ணமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
0
0