காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்ய சதியா? இந்திய அதிகாரி மீது வழக்குப்பதிந்த அமெரிக்கா..!!
Author: Udayachandran RadhaKrishnan30 November 2023, 9:57 am
காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்ய சதியா? இந்திய அதிகாரி மீது வழக்குப்பதிந்த அமெரிக்கா..!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்குக் கனடாவுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டது. தூதர்கள் வெளியேற்றம் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளை இரு தரப்பும் எடுத்தன.
இது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே அமெரிக்காவில் காலில்தான் விவகாரம் குறித்து மற்றொரு பரபர சம்பவம் நடந்துள்ளது.
அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதியைக் கொலை செய்ய இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா பரபர அறிக்கையை வெளியிட்டுள்ளது..
இது சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர் குறித்து பலரும் தெரிந்திருக்கலாம். தொடர்ச்சியாக இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வருபவர்.
சமீபத்தில் கூட ஏர் இந்தியா விமானத்திற்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அதில் சீக்கியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அதில் சம்பவம் நடக்கும் என்பதும் போலவும் கூறியிருந்தார்.
இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா என்று இரட்டை குடியுரிமை பெற்றவர் ஆவார். இவரைக் கொலை செய்யவே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவரைக் கொலை செய்ய இந்திய அரசு ஊழியர் ஒருவர் சதித்திட்டம் நியமித்துள்ளதாகப் பரபர குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 83 லட்ச ரூபாயைக் கொடுக்கவும் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.
இது குறித்து இந்தியா வெளியுறவுத் துறையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்கா உடனான கலந்துரையாடலின் போது, அமெரிக்க சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளோம். இதுபோன்ற தகவல்களை இந்தியா எப்போதும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும்.. அவை நமது தேசியப் பாதுகாப்பு நலன்களையும் பாதிக்கின்றன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஆராய உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்திய அரசு அமைத்துள்ளதாகவும் அவர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.