தொடரும் விபத்து… திருப்பதிக்கு சென்ற அரசுப் பேருந்து பஞ்சராகி பள்ளத்தில் கவிழ்ந்தது : சம்பவ இடத்தில் பயணி பலி..15 பேர் படுகாயம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 9:43 am

ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மனுபோலு பத்வேல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டயர் பஞ்சர் ஆனதால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் பேருந்து மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து சமயத்தில் பேருந்தில் 22 பேர் பயணம் செய்த நிலையில் கோவூர் மண்டலம் ரேகுண்டபாடு பகுதியைச் சேர்ந்த எஸ்.கே சலீமா (வயது 65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனுபோலு எஸ்.ஐ முத்தியால் ராவ் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லூர் மற்றும் கூடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…