மீண்டும் இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. கேரளாவில் தீவிரம் : அச்சத்தில் ஐயப்ப பக்தர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan14 December 2023, 4:52 pm
மீண்டும் இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா..கேரளாவில் தீவிரம் : அச்சத்தில் ஐயப்ப பக்தர்கள்!
கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 69 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 69 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இது தவிர பொருளாதார பாதிப்புகள், வேலையின்மை ஆகியவை சமூக பிரச்னைகளாகவும் வெடித்தது. பின்னர் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதன் தீவிரம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலும் தற்போது தொற்று பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
தேசிய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 230 பேரும் மொத்தமாக 949 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் தற்போது வரை 1091 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கேரளாவில் சமீபத்தில் பன்றி காய்ச்சலுக்கான அச்சம்தான் அதிகமாக பரவியிருந்தது. கொரோனா தொற்று குறித்து பெரிய அச்சம் எழவில்லை. ஆனால் சுவாச பிரச்னை காரணமாக தொடர்ச்சியாக மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுத்த நிலையில், அவர்களை பரிசோதித்து பார்த்தபோது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக அளவு பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேரை சபரிமலையில் தரிசனத்திற்காக புக் செய்துள்ளனர். இதில் 65-70 ஆயிரம் பேர் வரை மட்டுமே தரிசிக்க முடிகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கேரளாவில் இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிக அளவு குவிந்துள்ள நிலையில், மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.