ஓடும் ரயிலில் பயணிகளை துப்பாக்கியால் சுட்ட சிஆர்பிஎஃப் வீரர் : விசாரணையில் அதிர்ச்சி!!!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2023, 9:16 am
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது.
அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்) வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர் மற்றும் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். ஆனால் தொடர்ந்து அந்த வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆர்.பி.எப். வீரர், 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எப் வீரர் டஹிசர் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது அதில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே பாதுகாப்புப்படையினர், போலீசார் தப்பியோடிய வீரரை தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்தனர். அந்த வீரரின் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்தும் வீரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஓடும் ரெயிலில் பயணிகள் மீது ஆர்.பி.எப் வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.