தலீத் சிறுவனை அடித்து கொடுமைப்படுத்திய கும்பல்… 7 பேர் கைது.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan19 April 2022, 10:54 am
தலீத் சிறுவனை சாதியைச் சொல்லித் திட்டி, கால்களை நக்கச் செய்த கொடூரம் நடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் சுமார் 2 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தலீத் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை 5 அல்லது 6 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும், அடியால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும் அந்த நபரை, வாகனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களை நக்கச் செய்தது பார்ப்போரை கொந்தளிக்கச் செய்யும் வகையில் இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் நடந்தது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட தலீத் சிறுவன் 10ம் வகுப்பு படித்து வந்ததாகவும், கணவனை இழந்த தாயுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், சித்ரவதை செய்த நபர்களில் ஒருவரின் வயலில் அந்த நபரின் தாயார் வேலை செய்ததாகவும், அதற்கு ஊதியம் கேட்கச் சென்ற சிறுவனை, அவர்கள் கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.