திருவிழா போல தொடங்கிய திருமண விழா : தாலிக் கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் விழுந்த மணமகள்.. ஆளுங்கட்சி பிரமுகரின் திருமணம் நின்றதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2022, 1:55 pm
ஆந்திரா : கழுத்தில் தாலி கட்ட சில நிமிடங்களே உள்ள நிலையில் மண மேடையிலேயே மணமகன் மீது மயங்கி விழுந்து மணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்ததியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரவாடா தெலுங்கு தேச கட்சியின் இளைஞரணி தலைவர் சிவாஜி – சுஜனா திருமணம், கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு நடைபெற இருந்தது.
முன்னதாக மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த திட்டமிட்டனர். இருவரும் PRE WEDDING SHOOT நடத்தினர்.
இந்த நிலையில் திருமணத்தன்று முன்கூட்டியே திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து திருமண சடங்குகளும் நடைபெற்றது. ஆளுங்கட்சி பிரமுகரின் திருமணம் என்பதால் ஏற்பாடுகள் தடல்புடலாக இருந்தது.
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என எதற்கும் பஞ்சமில்லாமல் திருவிழா போல காட்சியளித்தது. அப்போது மணமேடையில் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி, மணமகள் தலையில் சீரகம் வெல்லம் வைத்து நூறு ஆண்டுகள் மணமக்கள் சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும் என புரோகிதர் வேத மந்திரங்கள் முழுங்க சடங்குகள் செய்து கொண்டுருந்தார்.
அப்போது மணமகள் சுஜனா திடீரென சுயநினைவை இழந்து மணமகன் மடியிலேயே சரிந்தார். இதைக்கண்ட பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மணமகள் சுஜனா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாரடைப்பில் மணமகள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் விஷம் அருந்தியதால் மணமகள் இறந்தது தெரியவந்தது.
எதற்காக அவர் விஷம் குடித்தார்?, காதல் தோல்வியா அல்லது விருப்பம் இல்லாத திருமணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.