வங்கி கணக்கில் இருந்து ₹.65 கோடி பிடித்தம் : வருமான வரித்துறை வைத்த செக்.. கடுப்பில் காங்கிரஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2024, 8:13 pm
வங்கி கணக்கில் இருந்து ₹.65 கோடி பிடித்தம் : வருமான வரித்துறை வைத்த செக்.. கடுப்பில் காங்கிரஸ்!!
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 16ம் தேதி அதிரடியாக முடக்கியது.2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகவும், அதற்கு அபராதமாக ரூ.210 கோடி செலுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.
இதில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் அடங்கும். வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனம் செய்திருந்தன.
இது குறித்து அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன், “வருமான வரித்துறையின் நடவடிக்கையால் எங்களால் மின் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாது பாரத் ஜடோ யாத்திரை போன்ற அரசியல் நடவடிக்கைகள் இதன் மூலம் முடங்கும்” என்று கூறியிருந்தார்.
தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்த அடுத்த நாளில் வருமான வரித்துறை இந்த நடவடிக்கை எடுத்திருப்பதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்று காங்கிரஸ் காட்டமாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், முடக்கப்பட்ட காங்கிரஸின் வங்கி கணக்கிலிருந்து ரூ.65 கோடியை வருமான வரித்துறை பிடித்தம் செய்திருக்கிறது.
காங்கிரஸின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60.25 கோடி டிமாண்ட் டிராப்ட்களாக எடுக்கப்பட்ட நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸின் கணக்குகளில் இருந்து ரூ.5 கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, வருமான வரித்துறையின் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ், வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பாக அடுத்த வழக்கு விசாரணை வரும் வரையில் வங்கிக்கணக்குகள் செயல்படலாம் என்று தீர்ப்பாயம் கூறியிருந்தது. இப்படி இருக்கும்போது வருமான வரித்துறை தன்னிச்சையாக ரூ.65 கோடியை பிடித்தம் செய்தது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.