காங்கிரசுக்கு எத்தனை எம்பி சீட்…? டெல்லியில் குட்டையை குழப்பும் தமிழக தலைவர்கள்…. திணறும் கேஎஸ் அழகிரி!

Author: Babu Lakshmanan
8 August 2023, 8:00 pm

பல கோஷ்டிகளாக செயல்படும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எங்கு கூட்டம் நடந்தாலும் சரி அங்கு தங்களுடைய உட்கட்சிப் பூசலை வெளிப்படுத்த தயங்குவதே இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி இருவர் முன்னிலையிலும் ஒருவருக்கொருவர் அண்மையில் கடுமையாக மோதிக்கொண்ட ஒரு நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகவும் மாறிவிட்டது. சமீபத்தில் தலைநகர் டெல்லியில் தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திருநாவுக்கரசர், கே எஸ். அழகிரி, கார்த்தி சிதம்பரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, தமிழகத்தில் கடந்த சில தேர்தல்களாக காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்து விட்டதே, எதனால் இப்படி நடந்தது? என்று ஒரு கிடுக்குப் பிடிகேள்வியை ராகுல் எழுப்பியுள்ளார். அதாவது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநிலத்தில் கட்சியை வளர்ப்பதற்காக ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதை சாடும் விதமாக அவர் கோபமாக இப்படி கேட்டிருக்கிறார்.

இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஒருமித்த குரலில், ” 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாம் 15 இடங்களில் போட்டியிட்டோம். 2019-ல் அது ஒன்பது தொகுதிகளாக குறைந்து போய்விட்டது. அதேபோல தமிழக தேர்தலில் 2016ம் ஆண்டு திமுக கூட்டணியில் நாம் 41 இடங்களில் களம் இறங்கினோம்.

ஆனால் 2021 தேர்தலில் 25 தொகுதிகளைத்தான் திமுக நமக்கு ஒதுக்கியது. இப்படி இந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துபோனதால் தான் வாக்கு சதவீதமும் சற்று குறைந்து விட்டது” என்று காரணம் கூறியிருக்கின்றனர்.

இதை ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் அரைகுறை மனதுடன் ஏற்றுக் கொண்டாலும் கூட ராகுல் எழுப்பிய கேள்வியின் அர்த்தத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் முழுமையாக புரிந்து கொண்டது போல் தெரியவில்லை.

“தொகுதிகள் குறைந்துபோனது ஒரு காரணம் என்றாலும் கூட, இன்னொரு பக்கம் 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக தேர்தல் இரண்டிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளின் ஓட்டு வித்தியாசத்தையும், காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெயித்த தொகுதிகளின் ஓட்டு வித்தியாசத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை நமக்கு குறைகிறது.

அப்படியென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் வலுவாக இல்லை என்பதைத்தானே காட்டுகிறது?” என்று இன்னொரு கிடுக்குப்பிடி கேள்வியை ராகுல் எழுப்பியதாகவும் இதற்கான காரணத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்களால் சரிவர தெரிவிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்போது “எதிர்வரும் தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில் திமுகவிடம் இருந்து குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கேட்டு பெறும் வகையில் உங்கள் அனைவருடைய செயல்பாடுகளும் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் மாநிலத் தலைமை திமுகவிடம் தைரியமாக பேரம் பேசி அதிக தொகுதிகளை பெறவேண்டும். அப்போதுதான் ஆட்சி அமைக்கும் அளவிற்கு நமக்கு எம்பிக்களின் எண்ணிக்கை அதிகமாக கிடைக்கும்” என்று கூறிவிட்டு, கே. எஸ் அழகிரியிடம் அதற்காக என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்? என்றும் ராகுல் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த கே எஸ் அழகிரி, “தமிழகத்தில் 72 ஆயிரம் பூத் கமிட்டிகளை மாநில காங்கிரஸ் அமைத்துள்ளது. வட்டார, மாவட்ட, மண்டல வாரியாக நாடாளுமன்றத் தேர்தல் மாநாடுகள் நடத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ராகுல் தமிழகத்திற்கு அடிக்கடி வந்தால் நமக்கான வாக்குகள் இன்னும் அதிகரிக்கும். குறிப்பாக இளைய தலைமுறையினரின் ஓட்டுகளை ஈர்க்க முடியும்” என்று ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.

ஆனால் கே எஸ் அழகிரி சொன்ன பூத் கமிட்டி கதையை முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், ராகுல் முன்பாக பட்டென்று போட்டு உடைத்தார். “தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்த பூத் கமிட்டிகளும் இல்லை. கட்சியும் சுறுசுறுப்பாக செயல்படுவது போல தெரியவில்லை. கட்சியில் எல்லாமே வியாபார மயமாகத்தான் உள்ளது” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக, பேசிய திருநாவுக்கரசர், “பூத் கமிட்டி பற்றி பேசுவதற்கு முன்பாக கட்சியின் அமைப்பு பற்றி இங்கே பேசாமல் இருக்க முடியாது. கட்சியில் வட்டார கமிட்டியே இல்லை என்கிறபோது பூத் கமிட்டியை மட்டும் எப்படி, எங்கிருந்து போடுவதாம்?… தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார், மாற்றப்படமாட்டார் என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. இதுபோன்றதொரு சூழல் தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல. எனவே கட்சியின் தலைவரை மாற்றுவது குறித்து உடனடியாக அறிவிக்கவேண்டும்” என்று கார்கேவிடவும், ராகுலிடமும் வலியுறுத்தி இருக்கிறார்.

கார்த்தி சிதம்பரமும் இதற்கு தூபம் போடுவதுபோல், “தமிழகத்தில்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை பலப்படுத்தவேண்டியது மிக அவசியம். எனவே கட்சித் தலைவர் உள்ளிட்ட சில மாற்றங்களை செய்தால்தான் அதை நிறைவேற்ற முடியும்” என்று உரத்த குரலில் குறிப்பிட்டார்.

அதேநேரம் “தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றக்கூடாது. தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வைக்கும் திமுகவிடம் கே எஸ் அழகிரி நல்ல நட்புறவை பேணி வருகிறார். அதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எந்த மாற்றமும் செய்யக்கூடாது” என்று ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் கே எஸ் அழகிரிக்கு ஆதரவாகவும் பேசி உள்ளனர்.

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரசின் அமைப்புச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையிலேயே தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த வேணுகோபால், “தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றுவது குறித்து இப்போது யாரும் பேச வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இரு தரப்பினரும் அதைப் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருமே கே எஸ் அழகிரியை மாற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு திரும்பிய பின்பு, கே எஸ் அழகிரி – திருநாவுக்கரசர் மோதல் விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “டெல்லியில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவது தொடர்பாக யாரும் பேசவில்லை. அது தொடர்பாக எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. மாநில தலைவர் மாற்றம் குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

இது அழகிரியின் ஆதரவாளர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. “திருநாவுக்கரசர் இரட்டை நாக்கு கொண்டவர். டெல்லியில் ஒரு பேச்சு திருச்சியில் ஒரு பேச்சு என்று அவருடைய போக்கு எப்போதும் மாறிக்கொண்டேதான் இருக்கும். நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டும் என்றாலும் பேசும் “என்று அவர்கள் நக்கலாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகின்றனர்.

“தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. ஏனென்றால் இங்குதான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 7 கோஷ்டிகள் இருக்கின்றன. போதாக்குறைக்கு, மகளிர் பிரிவில் ஐந்து கோஷ்டிகள் எதிரும், புதிருமாக செயல்படுகின்றன.

இவர்கள் அத்தனை பேருமே தங்களுக்குள் மாறுபட்ட ஆயிரம் கருத்துகளை கொண்டிருந்தாலும் கூட ஆளும் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் புகழ்ந்து, பாராட்டி பேசுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“இதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறினாலும் கூட காங்கிரசால் தனித்துப் போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலிலோ தமிழக சட்டப்பேரவை தேர்தலிலோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதுதான் எதார்த்த நிலை. இதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். அதனால் அவர்கள் ஒருபோதும் திமுகவை பகைத்துக் கொள்ள மாட்டார்கள். மேலும் தற்போது திமுக கூட்டணியில் இருந்துகொண்டே சுலபமாக கிடைக்கும் சலுகைகளை ருசிப்பதில்தான் அவர்களின் முழுக் கவனமும் உள்ளது. அதனால் 2019 தேர்தலில் திமுக ஒதுக்கிய 9 எம்பி சீட்டுகள் கிடைத்தாலே அதை பெரிய சாதனையாக கருதி ஏற்றுக் கொள்வார்கள்.

அதைவிட மிகக் குறைவான தொகுதிகளை, அதாவது நான்கைந்து எம்பி சீட்டுகள் கிடைத்தால் கூட அதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏனென்றால் வைகோவின் மதிமுக, திமுகவுடன் ஐக்கியமாகி விட்டதுபோல தமிழக காங்கிரஸின் நிலையும் இன்று ஏறக்குறைய அதேபோல்தான் இருக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட சில நேரங்களில் திமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் காங்கிரசோ கண்டும் காணாமல் வாய் மூடி மௌனமாகி விடுகிறது.

இப்படி இருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் எப்படி வளர்ச்சி காண முடியும்?….என்பதை யாராவது டெல்லி தலைமைக்கு எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுவும் சரியான ஆலோசனையாகத்தான் தெரிகிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 437

    0

    0