விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் தாக்குதல்… இளம் விவசாயி உயிரிழப்பு… டெல்லியில் பதற்றம்…!!

Author: Babu Lakshmanan
22 February 2024, 10:15 am

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயி உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி சென்றனர்.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து எல்லையிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், தடுப்புகளை அகற்றி மேற்கொண்டு முன்னேறி வர முயற்சித்தனர். அப்போது, அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசினர். இருப்பினும், சாக்கு பைகளை முகத்தில் கட்டியவாறு, கண்ணீர் புகையின் தாக்கத்தை சமாளித்துக் கொண்டே, விவசாயிகள் தடுப்புகளை கடந்து வர முயற்சித்தனர். ஆனால், அடுத்தடுத்து போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இதனிடையே, கடந்த 18-ந் தேதி, விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பருப்புவகைகள், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு அமைப்புகள் கொள்முதல் செய்யும் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் கொடுக்கும் விதமாக, போராட்டத்தை நிறுத்திவிட்டு, எல்லையிலேயே விவசாயிகள் தங்கி விட்டனர்.

இந்நிலையில், நேற்று பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பஞ்சாப்பைச் சேர்ந்த 24 வயதேயான இளம் விவசாயி சுப்கரன் சிங் என்பவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையே, 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார். இதனால், போராட்டத்தை தற்காலிகமாக 2 நாட்களுக்கு விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயி உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், ‘கானவுரி எல்லையில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்கியுள்ளது. நட்பு ஊடகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பா.ஜ.கவிடம் விவசாயிகளின் கொலை பற்றிய கணக்கை ஒரு நாள் வரலாறு நிச்சயம் கோரும்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 290

    0

    0