‘இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததே இல்ல’.. டெல்லியை அலறவிடும் கனமழை.. யமுனை வெள்ளத்தால் மிதக்கும் தலைநகரம்..!!
Author: Babu Lakshmanan13 July 2023, 3:46 pm
டெல்லியில் பெய்து வரும் கனமழையினால் யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியான உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்லிக்குள் ஓடும் யமுனை நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிகளவாக 208 மீட்டரை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லியின் பல முக்கிய இடங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் அமைந்துள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதேபோல, தாழ்வான பகுதிகளிலும், குடிசைகள் நிறைந்த பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தியாவசியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
நேற்றிரவு ரிங் ரோடு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை இரவில் நீர் சூழ்ந்த நிலையில், அந்த பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். யமுனை நதி மீது கட்டப்பட்டுள்ள பாலங்களின் இரண்டு பகுதிகளிலும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெள்ள பாதிப்பு காரணமாக டெல்லிக்கு குடிநீர் வழங்கி வரும் வஜிரபாத், சந்திரவால், ஓக்லா உள்ளிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.