டெல்லி மதுபானக் கொள்கை ஊழல்.. முதலமைச்சர் மகளுக்கு தொடர்பு ; கட்டம் கட்டும் அமலாக்கத்துறை.. ஆட்டம் காணும் 2 மாநில ஆட்சி…!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 4:58 pm

டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த ஊழலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நிகழ்ந்த முறைகேடு அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே, டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தனித்தனியாக விசாரித்து வருகிறது.

இந்த ஊழல் தொடர்பாக தொழிலதிபர் அமித் அரோரா என்பவரை கைது செய்து அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சில தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

அதாவது,”குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் அமித் அரோரா தனது வாக்குமூலத்தில், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்த சவுத் குரூப்பில் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வின் மகளும், தெலங்கானா எம்எல்ஏவுமாக இருக்கும் கவிதா மிகவும் முக்கியமான நபர்,” என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையில் ‘சவுத் குரூப்’ என்ற நிறுவனத்திடமிருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சார்பாக ரூ.100 கோடியை விஜய் நாயர் பெற்றுள்ளதாகவும், சரத் ரெட்டி, கவிதா, மகுந்த ஸ்ரீனிவாசுலு ரெட்டி ஆகியோர் கட்டுப்பாட்டில் சவுத் குரூப் இருப்பதாகவும் கைது செய்யப்பட்டுள்ள அமித் அரோரா விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஏற்கனவே சந்திரசேகர் ராவ் பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதனால் அமலாக்கப்பிரிவு சந்திரசேகர் ராவ் மகளை டெல்லி மதுபானக்கொள்கை ஊழலில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி இன்னும் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக கவிதா கூறுகையில், “ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கப்போகிறது என்றால் அங்கே முதலில் அமலாக்கத்துறை வரும், பின்னர் பிரதமர் மோடி வருவார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு எதிராக இப்போது திருப்பிவிடப்பட்டுள்ளன. நீங்கள் இதுபோன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு தேர்தலை வெல்ல முடியாது என்பதை மட்டும் நான் தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, liquorqueen என்னும் ஹேஷ்டேக்கை தெலங்கானா எதிர்கட்சியினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 466

    0

    0