பட்டாசு தடை இருந்தும்… தீபாவளி நாளில் மிக மோசமான நிலைக்கு சென்ற தலைநகரின் காற்று மாசு அளவு..!
Author: Vignesh24 October 2022, 12:15 pm
டெல்லி: டெல்லியில் பட்டாசுக்கு இந்த ஆண்டில் அனைத்து வகையில் தடை உள்ளபோதும் காற்று தர குறியீடு மோசம் என்ற அவல நிலையே இருந்து வருகிறது.
காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லியில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லியில் அரசு தடை விதித்து உள்ளது.
இந்த பட்டாசு தடையை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு உச்சகட்ட நடவடிக்கைகக்கு பின்னரும், டெல்லியில் உள்ள மக்கள் இன்று காலை எழுந்ததும், புகையும், பனியும் படர்ந்த காற்று மாசுபாட்டுடன் கூடிய நகரையே பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த டெல்லியில், காற்று தர குறியீடு மோசம் (276) என்ற அளவிலேயே இன்று உள்ளது. குறிப்பாக, டெல்லி பல்கலைக்கழக பகுதிகள் மற்றும் லோதி சாலை பகுதிகள் மிக மோசம் என்ற அளவில் முறையே 319 மற்றும் 314 என உள்ளன.
டெல்லி விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மதுரா சாலையில் 290 மற்றும் 245 என்ற அளவில் மோசமடைந்து உள்ளன.
டெல்லியை சுற்றிய பஞ்சாப், உத்தர பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தானில் வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிப்பதும் காற்று தர குறியீடு மோசமடைந்து காணப்படுவதற்கான காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.