இலவச தரினத்திற்காக திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் : 20 மணி நேரம் காக்க வேண்டிய சூழல்.. 5 கி.மீ தூரம் வரை வரிசையில் நிற்கும் நிலை!!
Author: Udayachandran RadhaKrishnan28 மே 2022, 2:33 மணி
ஆந்திரா : திருப்பதி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது.
அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.
அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை வழிபட முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக வரிசையில் நிற்கும் பக்தர்கள் மற்றும் சாலையில் நடக்கும் பக்தர்கள் வெப்பம் காரணமாக சிரமம் அடைந்து வருவதால் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் லாரி கொண்டுவரப்பட்டு சாலைகள் மற்றும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கால்களுக்கு தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களுக்கு உணவு குடிநீர், பால், மோர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
0
0