பாஜக இருக்கட்டும்… தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா..? இதோ முழுவிபரம்…!!

Author: Babu Lakshmanan
15 February 2024, 2:18 pm

பாஜக இருக்கட்டும்… தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா..? இதோ முழுவிபரம்…!!

தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

அரசிய்ல கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையில் பல்வேறு மதிப்புகளி தேர்தல் பத்திரங்கள் அங்கீரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள் அல்லது பெருநிறுவனங்கள் தாங்கள் விரும்பும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்களை பெற்று நன்கொடை வழங்கலாம். இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பத்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதோடு, 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்களின் விபரங்களை ஏப்ரல் 13ம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 9,208.23 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மொத்தம் அளிக்கப்பட்ட தேர்தல் பத்திர நிதியில் 57 சதவீத நிதியை பெற்று பாஜக முதலிடத்தில் உள்ளது. 2017-2022 வரை பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 5,271.97 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, 952.29 கோடியுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.767.88 கோடியுடன் 3வது இடத்திலும், ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் 622 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை 2021 முதல் ஆட்சியில் இருக்கும் திமுக, 2019-2020 முதல் 2022-2023 வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.628.50 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 2019-2020ஆம் ஆண்டு மாநிலக் கட்சிகளுக்கு நிதியாக வழங்கப்பட்ட 3441.32 கோடி நிதியில், திமுக 45.5 கோடி, அதிமுக 6.05 கோடி நிதியும் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது.

2020-21ஆம் நிதி ஆண்டு வழங்கப்பட்ட 325.06 கோடி ரூபாயில் திமுக 80 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது. கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டில், 36 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் 1,213 கோடி ரூபாய். இதில் அதிகபட்சமாக 318 கோடி ரூபாயை திமுக நன்கொடையாக பெற்றுள்ளது. 2022-2023ஆம் ஆண்டை பொறுத்தவரை, திமுக, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 185 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!