கேரளா போற பிளான் இருக்கா..? அதுக்கு முன்னாடி புதிய போக்குவரத்து விதிகளை தெரிஞ்சுக்கோங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2023, 8:20 pm

கேரளாவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் தற்போது முக்கிய சாலைகளில் நிறுவப்பட்டுள்ளது.

232 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல், அனுமதியின்றி வாகனத்தை பார்க் செய்து வைத்தல், தலைக்கவசம் இன்றி பைக் ஓட்டுவது போன்ற சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட உள்ளது.

சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி சோதனையிடுவது தவிர்க்கப்படும் என்று கேரள போக்குவரத்து துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் உரிமையாளர்களுக்கு செல்போனில் மெசேஜ் மூலம் தகவல் கொடுக்கப்பட்டு அதன் பிறகு அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால், சீட் பெல்ட் அணியாமல் கர் ஓட்டினால் ரூ 500, வேகமாக வாகனம் ஓட்ட்டினால் ரூ. 1,500, போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக கேரள போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கேமராக்கள் காருக்குள் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலோ, செல்போன் பயன்படுத்திக் கொண்டு இருந்தாலோ எளிதில் பிடித்து விடும் எனவே ஏமாற்று வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று வாகன ஓட்டிகளை கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக கேரள அதிகரிகள் கூறுகையில், இதற்கு முன்பு இருந்த கேமராக்களில் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் மட்டுமே துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் இருக்கும். ஆனால் தற்போது நிறுவப்பட்டுள்ள ஏஐ கேமராக்கள் ஹெச்.டி தரத்தில் அகச்சிவப்பு முறையிலும் காருக்குள் விளக்குகள் இல்லாத நிலையிலும் எளிதாக படம் பிடித்து விடும்.

எனவே விதி மீறும் வாகன ஓட்டிகள் தப்ப முடியாது. ஏஐ கேமராக்கள் படம் பிடிக்கும் காட்சிகளை ஆய்வு செய்து அதன்பிறகே அபராத தொகை விதிக்கப்படும் என்றார்.

கடந்த வியாழக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஏஐ கேமராக்களின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். அதன்படி தற்போது விதி மீறும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைக்கு அபராதம் விதிக்கப்படாது எனவும் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மே 19 ஆம் தேதிக்குப் பிறகு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கும் எனவும் கேரள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளா இயற்கை காட்சிகளை கொண்ட பல அழகிய சுற்றுலா தளங்களை கொண்டதாகும். இதனால், தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப்பயணிகள் பலரும் கேரளாவிற்கு அதிகம் செல்வதுண்டு.

இவர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலோ.. வாடகை வாகனங்களிலோ.. செல்லும் போது விதிகளை மீறினால் உடனே இந்த ஏஐ கேமராக்கள் காட்டிக் கொடுத்து விடும்.

எனவே போக்குவரத்து போலீசார் இல்லையே என்று போக்குவரத்து விதியை மீறினால் அபராத தொகையை கட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாக நேரிடும். எனவே கேரளா செல்லும் வாகன ஓட்டிகள் இதை மனதில் வைத்து செல்ல வேண்டியது அவசியம்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!