நள்ளிரவில் சோதனை ஏன்? பாஜகவுக்காக வேலை செய்கிறீர்களா? என்ஐஏவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2024, 8:29 pm
நள்ளிரவில் சோதனை ஏன்? பாஜகவுக்காக வேலை செய்கிறீர்களா? என்ஐஏவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி!
மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. என்ஐஏ குழு இன்று காலை சோதனை நடத்தியபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இருந்தபோதிலும் பாலை சரண் மெய்தி மற்றும் மனோப்ரதா ஜனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உள்ளூர் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். உள்ளூர் காவல் நிலையத்தில் என்ஐஏ புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் என்ஐஏ பா.ஜ,கவுக்காக வேலை செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்? அவர்களுக்கு போலீஸ் அனுமதி கொடுத்தது யார்?
நள்ளிரவில் வேறு யாராவது அந்த இடத்திற்குச் சென்றிருந்தால், உள்ளூர்வாசிகள் எப்படி கையாண்டு இருப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் ஏன் கைது செய்தார்கள்?.
பா.ஜ.க என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா? என்ஐஏ-யின் உரிமை என்ன? பா.ஜ.கவுக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து வருகிறது.
இந்த பா.ஜ.க மோசமான அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என கூறினார்.