வளர்ப்பு பிராணிக்காக இந்தியா வர மறுத்த மருத்துவர்…துப்பாக்கி முனையில் கைது செய்த ரஷ்ய ராணுவம் : சொந்த நாட்டிற்கு வர விருப்பம்!!
Author: Udayachandran RadhaKrishnan1 May 2022, 2:36 pm
வனவிலங்குகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பதில் இந்தியாவில் சட்டச் சிக்கல் உள்ளதை அடுத்து உக்ரைனில் இருந்து இந்தியா திரும்ப மறுப்பு தெரிவித்த மருத்துவர் ரஷ்யப் படைகள் துப்பாக்கி முனையில் கைது செய்ததை தொடர்ந்து இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தனுக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிரி குமார் பாட்டில். கடந்த 2007ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்ற அவர் மருத்துவ படிப்பை முடித்து உக்ரைன் அரசு மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மற்றும் மாணவர்களை இந்தியாவுக்கு மீட்டு வந்தது.
அப்போது தான் வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வரும் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை அங்கேயே விட்டு இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவரை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள் துப்பாக்கி முனையில் கைது செய்தது. உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்க மாட்டேன் என கிரி குமார் பாட்டில் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து அவரை ரஷ்ய படை விடுவித்தது.
இதையடுத்து இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட கிரி குமார் பாட்டில் தன்னுடன் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை இந்தியாவுக்கு கொண்டுவர அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் வனவிலங்குகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்ப்பதில் சட்ட சிக்கல் உள்ளதை அடுத்து ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் தனி இடம் வழங்கினால் அதில் வைத்து சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தையை வளர்த்துக் கொள்வதாக விண்ணப்பம் அளித்துள்ளார்.