ரவுடி மாதிரி பேசாதீங்க.. நீங்க அரசியல்வாதி : உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 April 2023, 9:41 pm
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வெள்ளிக்கிழமை மேற்குவங்காளத்தின் சுரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்காளத்தில் பாஜக 35 தொகுதிகளில் வெற்றிபெறும். அவ்வாறு 35 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி 2025-ம் ஆண்டுக்கு மேல் நிலைக்காது’ என்றார்.
இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை அமித்ஷா பேரணி ஒன்றில் பேசினார். அது பிரச்சினையில்லை.
ஆனால், ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்போம் என்று நாட்டின் உள்துறை மந்திரி எப்படி பேச முடியும். நாட்டின் அரசியலமைப்பு மாறிவிட்டதா?
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 35 இடங்களில் வெற்றிபெற்றால் மேற்குவங்காளத்தில் மாநில அரசு அதன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யாது என்று அமித்ஷா பேசக்கூடாது.
அமித்ஷாவின் பேச்சு மேற்குவங்காளத்தில் மாநில அரசை கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதை காட்டுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா ரவுடி போல் பேசக்கூடாது’என்றார்.