முந்திக் கொண்ட அமலாக்கத்துறை… உச்சநீதிமன்றத்தில் வைத்த செக்.. தீவிர யோசனையில் செந்தில் பாலாஜி தரப்பு..!!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 2:17 pm

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளையில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இந்த வழக்கை விசாரித்தார்.

கடந்த 12ம் தேதி முதல் 3 நாட்கள்ள தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று நீதிபதி உறுதி செய்தார். அமலாக்கத்துறை கஸ்டடி எடுக்க முழு அதிகாரம் உள்ளதாகவும், சட்டவிதிகளின் படியே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்த போதும் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வரும் 24-ந்தேதி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் போது, இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்சநீதிமன்த்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், பின்னர் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியான முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் வலியுறுத்தி உள்ளது.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Amaran Movie Rs 308 Crore Collection அமரன் வசூல் வேட்டையில் செம்ம வேகம்: சிவகார்த்திகேயனின் மாஸ் சாதனை
  • Views: - 350

    0

    0