ஹேமந்த் சோரனை காவலில் எடுக்க ED காட்டிய தீவிரம்… ராஞ்சி நீதிமன்றம் போட்ட அதிரடி.. கைதுக்கு எதிரான ரிட் மனு நாளை விசாரணை…!!
Author: Babu Lakshmanan1 February 2024, 8:06 pm
சென்னை ; ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் விதித்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், தொடர்ந்து அவர் ஆஜராகாத நிலையில், சம்மனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார்.
இதன் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினார் சோரன். பல மணிநேர விசாரணை முடிந்த பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜார்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. முன்னதாக, 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இதையடுத்து, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறைக்கு ஹேமந்த் சோரன் அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான ஹேமந்த் சோரனின் ரிட் மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
0
0