‘ரொம்ப சந்தோசப்படாதீங்க.. தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்’… அமலாக்கத்துறை விவகாரம் ; எதிர்க்கட்சிகளுக்கு அமித்ஷா எச்சரிக்கை
Author: Babu Lakshmanan12 July 2023, 9:39 am
அமலாக்கத்துறை இயக்குநரின் 3வது முறை பதவி நீட்டிப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை இயக்குநராக இருந்து வரும் சஞ்சய் மிஸ்ராவுக்கு இரண்டு முறை பதவி நீட்டிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 3வது முறையாக அவருக்கு மத்திய அரசு பதிவு நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அமலாக்கத்துறை இயக்குநரின் மூன்றாவது கால நீட்டிப்பை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், அமலாக்கத்துறை மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அடைய தேவையில்லை. சிவிசி சட்டத்தில் திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டது. அதை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்தின் தவறான பக்கத்தில் செயல்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் அப்படியே இருக்கும்.
அமலாக்கத்துறை என்பது அனைவருக்கும் மேலானது ஆகும். பணமோசடி குற்றங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல் ஆகியவற்றை விசாரிப்பதற்கான அதன் நோக்கத்தை அது தொடர்ந்து தொடரும். அமலாக்கத்துறை இயக்குனர் யார் என்பது முக்கியமில்லை, ஏனெனில் இந்த பதவியில் இருப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரான மனநிலை கொண்ட ஊழல்வாதிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள், எனக் கூறினார்.