எஞ்சாய் பண்ணுங்க : தசரா கொண்டாட குவாட்டர் + கோழி கொடுத்த ஆளுங்கட்சி… முகம் சுழித்த பொதுமக்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2023, 10:29 am
இந்தா புடிங்க.. எஞ்சாய் பண்ணுங்க : தசரா கொண்டாட கோட்டர் + கோழி கொடுத்த ஆளுங்கட்சி… அரசியலில் பரபரப்பு!!
வட இந்தியாவின் முதன்மையான பண்டிகைகளில் நவராத்திரி விழா. பல வாரங்களாக நடைபெறும் நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ராவணன் உள்ளிட்டோர் உருவபொம்மைகளை எரித்து ‘கொண்டாடுவர்’.
நவராத்திரி இறுதி நாளில் சிலைகளை நீர்நிலைகளை கரைத்து நிறைவு செய்வர். ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி கட்சி நிர்வாகிகளோ ‘மாற்றி யோசி’ என வித்தியாசமாக நவராத்திரியை கொண்டாடி முகம் சுளிக்க வைத்திருக்கின்றனர்.
விசாகப்பட்டினம் தெற்கு தொகுதியை சேர்ந்தவர் ஆளும் கட்சி பிரமுகரான டொட்டி பாபு ஆனந்த். இவர் தெற்கு மண்டல் பிரிவின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி வார்டு 31-ல் நேற்று தசரா பண்டிகையை முன்னிட்டு டொட்டி பாபு ஆனந்த் விநோத பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
அதாவது வார்டு 31-ல் ஒரு வீடு முன்பாக டேபிள் போட்டு அந்த டேபிளில் உயிருள்ள பிராய்லர் கோழிகளை வரிசையாக அடுத்தி வைத்துக் கொண்டார்.
பக்கத்திலேயே பெட்டி பெட்டியாக குவார்ட்டர் மது பாட்டில்களை கொண்ட பெட்டியையும் அடுக்கினார். தெருவில் நின்று கொண்டு போகிற வருகிறவர்களை எல்லாம் கூவி கூவி அழைத்து உயிருள்ள கோழி + குவார்ட்டர் சரக்கை கைகளில் திணித்து தசரா பண்டிகையை கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சை சம்பவம் தொடர்பாக உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அத்தொகுதி எம்.எல்.ஏ.வான வசுபாலி கணேஷ் குமாரும் செய்தியாளர்களின் ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என இருந்து வருகிறார். இப்போது இந்த கோழியும் குவார்ட்டரும் விவகாரம்தான் ஆந்திரா அரசியலில் விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.
ஆந்திரா மாநில சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்குதேசம் ப்ளஸ் ஜனசேனா, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் களத்தில் உள்ளன.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக மாறுபட்ட கருத்து கணிப்புகளும் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.