பயங்கரவாத அமைப்புகள் கூட இந்தியா பெயரில் உள்ளது : I.N.D.I.A கூட்டணியை தாக்கி பேசிய பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 5:03 pm

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் பிரச்சினை காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இன்று 4 -வது நாளாகவும் இரு அவைகளும் முடங்கியது.

முன்னதாக இன்று காலை பா.ஜனதா நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி,ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது.

இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததே இல்லை. அவர்கள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். ஆனால் பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும் , கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் “இந்தியா” உள்ளது.

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு நாட்டின் பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. குறிக்கோளற்ற எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை.

அதேவேளையில் நாம் இன்னும் ஒரு ஆண்டில் நடப்பு ஆட்சியை பூர்த்தி செய்யவுள்ளோம். எனவே மீண்டும் நாம் புத்துணர்வுடன் எழுச்சியுடன் செயல்பட்டு அடுத்த தேர்தலை சந்திக்க நம்மை கட்டமைக்க வேண்டும். 2024 தேர்தலுக்குப் பிறகு மக்கள் ஆதரவுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும்.தனது அடுத்த ஆட்சிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பிரதமர் மோடி கூறினார்.

இதற்கிடையில், சில எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அனுப்ப வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்தியா (INDIA) கூட்டணியை சேர்ந்த 26 கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். அப்போது மணிப்பூர் பிரச்சினை, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்பதால் இது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 358

    0

    0