100 வயதில் தாத்தாவுக்கு திருமணம்…ரூ.100 மாலையுடன் வலம் வந்த மணமக்கள்: பேரன்களின் ஆசையை நிறைவேற்றிய குடும்பம்..!!
Author: Rajesh18 February 2022, 5:25 pm
மேற்குவங்கம்: தனது தாத்தாவின் 100வது பிறந்தநாளையொட்டி தாத்தா, பாட்டிக்கு குடும்பத்தினர் மீண்டும் திருமணம் செய்து வைத்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஸ்வநாத் சர்கார். இவருக்கு 6 பிள்ளைகள், 23 பேரக் குழந்தைகள் மற்றும் 10 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர். தாத்தாவின் 100வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்ட இவரது குடும்பத்தினருக்கு சூப்பரான யோசனை ஒன்று தோன்றியுள்ளது.
1953ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகள் தங்களது திருமண நாளை இதுவரை கொண்டாடியதே இல்லையாம். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்து தாத்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதே இந்த ஐடியா.
முதல்முறையாக நடந்த திருமணத்தில் அனைத்து சடங்குகளும் அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் வரும் சடங்கினை செய்வதற்கு, 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூர்வீக வீட்டிற்கு பாட்டி சிரோத்வாணியை இரண்டு நாட்களுக்கு முன்பே அங்கு அழைத்துச் சென்று மணப்பெண்ணைத் தயார் செய்துள்ளனர்.
இதையடுத்து, திருமண நாளன்று பாமுனியா கிராமத்திற்கு சென்று தன்னுடைய மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார் பிஸ்வநாத். குதிரையில் வந்த அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
பாரம்பரிய திருமண உடையில் இருந்த திருமண ஜோடி, பணத் தாள்களால் ஆன மாலையை மாற்றிக் கொண்டனர். தனது பிள்ளைகள் ஏற்பாடு செய்திருந்த இந்த திருமணத்தினால் குறித்த தாத்தா மகிழ்ச்சியடைந்ததுடன், இவர்களின் திருமணத்திற்கு கிராமத்தில் இருந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
100 வயதான தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக குடும்பத்தினர் மீண்டும் திருமணம் நடத்தி மகிழ்ச்சியடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.