கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Author: Hariharasudhan
29 October 2024, 11:09 am

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

காசர்கோடு: கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தின் நீலேஸ்வரம் பகுதியில் வீரர்காவு கோயில் அமைந்து உள்ளது. இந்தக் கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று இரவும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும், திருவிழாவுக்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வீரர்காவு கோயில் அருகே ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், திடீரென அறையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த அனைத்து பட்டாசுகள் படபடவென்று வெடிக்கத் தொடங்கின. இதனை சற்று எதிர்பாராத ஆயிரக்கணக்கான மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் பெரும் பட்டாசு விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் இது குறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடர்ந்து, அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். இதுவரை 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், சுமார் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இவர்கள் காசர்கோடு மாவட்ட அரசு மருத்துவமனை, கண்ணூர், மங்களூரு ஆகிய பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க : காரில் குழந்தை கடத்தல்.. சுற்றிவளைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மேலும், அளவுக்கு அதிகமாக பட்டாசுகளை சிறிய அறையில் அடைத்து வைத்ததே இதற்கான மிக முக்கிய காரணம் என்றும், இதற்கான முறையான அனுமதி பெறவில்லை என்றும் கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக 8 கோயில் நிர்வாகிகளை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

  • Veera Dheera Sooran Box Office Collection இறங்கி அடித்த சியான் விக்ரம்…அசுர வசூலில் ‘வீர தீர சூரன்’.!