பாஜகவில் சேர சொல்லி நிர்பந்தம் : மத்திய அரசின் ஏஜென்சி மூலம் குறிவைக்கிறார்கள் : கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2024, 7:11 pm
பாஜகவில் சேர சொல்லி நிர்பந்தம் : மத்திய அரசின் ஏஜென்சி மூலம் குறிவைக்கிறார்கள் : கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு!!
தன்னை பாஜகவில் இணையக் கட்டாயப்படுத்துவதாகக் கூறி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “எங்களுக்கு எதிராக அவர்கள் எந்த சதியும் செய்ய முடியும்.. நானும் உறுதியாக இருக்கிறேன். நான் வளைந்து கொடுக்கப் போவதில்லை. என்னை பாஜகவில் சேரச் சொல்கிறார்கள்..
அதன் பின்னர் அப்படியே என்னை காலி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.. ஆனால் நான் ஒருபோதும் பாஜகவுக்குச் செல்ல மாட்டேன் என்று சொன்னேன். என்ன ஆனாலும் சரி நான் பாஜகவில் மட்டும் இணையவே மாட்டேன்” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டில் 40 சதவீதத்தைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செலவிடுகிறது. ஆனால், பாஜ தலைமையிலான மத்திய அரசு தேசிய பட்ஜெட்டில் 4 சதவீதத்தை மட்டுமே இந்த துறைகளுக்குச் செலவிடுகிறது.. இன்று அனைத்து மத்திய விசாரணை ஏஜென்சிகளும் எங்களைத் தான் குறிவைக்கிறார்கள் என பேசினார்.
மனிஷ் சிசோடியா செய்த தவறு அவர் நல்ல பள்ளிகளை உருவாக்கியது தான். சத்யேந்தர் ஜெயின் செய்த தவறு, அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கியதுதான். பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மணீஷ் சிசோடியா பாடுபடவில்லை என்றால் அவரை கைது செய்திருக்க மாட்டார்கள். எங்களை அழிக்க அனைத்து வகையான சதிகளையும் உருவாக்கினர், ஆனால் எங்களைத் தடுக்க முடியவில்லை.
மேலும், பொதுமக்கள் தங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்குத் தந்து வருகிறார்கள். அதுவே எங்களுக்கு போதும்.. அதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை” என்றும் அவர் தெரிவித்தார்..