அடுக்குமாடி குடியிருப்பு முன் மலை போல குவிந்த குப்பை : குப்பை வரி செலுத்தாததால் நகராட்சி ஊழியர்கள் செய்த செயல்..!!
Author: Babu Lakshmanan25 ஆகஸ்ட் 2022, 6:39 மணி
குப்பை வரி செலுத்த தவறியதால் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நகராட்சி ஊழியர்கள் குப்பையை கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் உள்ள நகரங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை எடுத்து செல்வதற்காக நகராட்சிக்கு 120 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இது தவிர நகர்ப்புறங்களில் உள்ள குடிசை பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மாதம் 30 ரூபாய் குப்பை வரி செலுத்த வேண்டும்.
விஜயநகரத்தில் உள்ள சாய் அமிர்தா அப்பார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடந்த மாதம் நகராட்சிக்கு குப்பை வரி செலுத்த தவறி விட்டனர். பல்வேறு காரணங்களால் அவர்கள் குப்பை வரி செலுத்துவதை தவிர்த்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் கூடை கூடையாக குப்பையை எடுத்து வந்து சாய் அமிர்தா அப்பார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பு முன் கொட்டி விட்டு சென்றனர்.
இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் பொது மக்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும், நகராட்சி ஊழியர்கள் கடமையே கண்ணாக குப்பையை கொட்டி விட்டு சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி ஊழியர்கள் இந்த செயலுக்கு அரசியல் ரீதியாக கடும் கண்டனங்கள் வெளியாகி உள்ளன.
0
0