அரசுப் பேருந்து மோதி சினை மான் உயிரிழந்த பரிதாபம் : இறந்ததாக நினைத்த குட்டி மான் 10 நிமிடம் கழித்து உயிர்தெழுந்த அதிசயம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 11:26 am

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் அரசுப் பேருந்து மோதி சினை மான் இறந்த நிலையில் வயிற்றில் இருந்து வெளிவந்த குட்டி மானும் உயிரிழந்ததாக நினைத்த போது 10 நிமிடம் கழித்து உயிர்த்தெழுந்த காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற சான்றோர்களின் வாக்கை இந்த கலியுகத்திலும் நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று திருப்பதி மலை பாதையில் நடைபெற்ற விபத்தில் இந்த கலியுகத்திலும் நிரூபிக்கப்பட்டது.

திருப்பதி மலைப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது நிறைமாத சினை மான் ஒன்று சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்ல தாவி குதித்து ஓடியது.

அப்போது வேகமாக வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து அந்த சினை மான் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மான் தாடை பிளந்த நிலையில் அது துடிதுடித்து கொண்டிருந்தது.

அப்போது அதன் வயிற்றில் இருந்து வெளியேறிய மான்குட்டி சற்றுநேரம் அங்கேயே கிடந்தது. அதற்குள் தாய் மான் இறந்துவிட குட்டி மான் அசைவில்லாமல் படுத்துக் கிடந்தது.

விபத்தில் தாய், குட்டி ஆகிய இரண்டும் இறந்துவிட்டன என்று கருதப்பட்ட நிலையில் அந்த வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்க்க துவங்கினர்.

அதே நேரத்தில் அசைய துவங்கிய குட்டி மான் எழுந்து ஓட முயற்சித்து தள்ளாடி, தள்ளாடி எழுந்து சுமார் நூறு மீட்டர்தூரம் நகர்ந்து சென்றது.

இதனை கவனித்த பக்தர்கள் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற முன்னோர்களின் முதுமொழி திருப்பதி மலைப்பாதையில் நடைபெற்ற இந்த விபத்தில் கலிகாலத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பேசிக்கொண்டனர்.

அத்தோடு பக்தர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் இறந்து போன மான் மற்றும் உயிருடன் இருந்த குட்டி இரண்டையும் மீட்டு கொண்டு சென்றனர். அங்கு குட்டி மானுக்கு சிகிச்சை அளித்து அதனை காப்பாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!