கடவுளை அவமதித்து போஸ்டர்… குவியும் கண்டனம் : சர்ச்சை இயக்குநருக்கு எதிராக மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!
Author: Udayachandran RadhaKrishnan7 July 2022, 9:41 pm
செங்கடல், மாடத்தி போன்ற படங்களை இயக்கிய லீனா மணிமேகலை, தற்போது காளி என்ற டாக்குமென்டரி படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் காளி வேடம் போட்டுள்ள பெண் சிகரெட் பிடிப்பது போன்றும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
காளி தெய்வத்தை ஹிந்துக்கள் கடவுளாக, காவல் தெய்வமாக வணங்கி வரும் சூழலில் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டு ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய லீலா மணிமேகலைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
லீனா மீது டில்லி, உ.பி., ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட ஊர்களிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கலவரத்தை தூண்டும் செயல் என்று நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலரும் அவரை கண்டித்தனர். இப்படி பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் தனது தரப்பு நியாயத்தையே அவர் முன் வைத்து வருகிறார்.
சிவன், பார்வதி போன்று வேடமிட்ட இரண்டு பேர் சிகரெட் பிடிக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார் லீனா. அதோடு, ‛‛நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பது பற்றி பாஜ., பணம் கொடுக்கும் டிரோல் ஆர்மிக்கு தெரியாது. இது என்னுடைய படம் அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறது. இந்த சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு மற்றும் மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். ஹிந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது” என பதிவிட்டுள்ளார்.
லீனாவின் இந்த கருத்தை பலரும் ஆதரிக்கவில்லை. இந்தியா என்றாலே ஹிந்துத்துவா தான். இதே மாதிரி கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களுக்கு உங்களால் வீடியோ வெளியிட முடியுமா. அதற்கு உலகம் எப்படி பிரதிபலிக்கும் என்பதை பாருங்கள். இந்த உலகில் உள்ள மக்களின் உண்மையான மதச்சார்பின்மை உணர்வைக் கண்டறிய அதை செய்யுங்கள் பார்க்கலாம் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு போபால் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால்போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .