திமுகவிடம் கேட்கப்பட்ட தொகுதிகள் எத்தனை? பேச்சுவார்த்தைக்காக வந்த காங்., மூத்த தலைவர் பதில்!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 1:21 pm
திமுகவிடம் கேட்கப்பட்ட தொகுதிகள் எத்தனை? பேச்சுவார்த்தைக்காக வந்த காங்., மூத்த தலைவர் பதில்!!
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை குறித்து இந்த முதற்கட்டமாக பேச்சுவார்த்தையில் முடிவெடுக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இன்றைய பேச்சுவார்த்தையில் புதுச்சேரி உட்பட மொத்தம் 12 தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழுவை காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் பேசும் போது, எவ்வளவு தொகுதி கேட்போம் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.