‘உங்களுக்கு துணிச்சல் இருக்கா..?’… ராகுல் காந்திக்கு பகிரங்கமாக சவால் விட்ட ஐதராபாத் எம்பி ஒவைசி..!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 1:18 pm

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு ஐதராபாத் தொகுதி எம்பி ஒவைசி சவால் விட்டுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ், திமுக உள்பட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து I.N.D.I.A. எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். மேலும், ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து, தொகுதி பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, I.N.D.I.A. கூட்டணியை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும், அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை என்றும், ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை எனக் கூறினார்.

தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்ப்பதாகவும், பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்தை தொடர்ந்து, அதற்கு ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி அவர்களே, உங்களின் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிட வேண்டாம் என்றும், துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து தன்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள் என்று சவால் விடுத்தார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!