நான் மோடியின் தீவிர ரசிகன்… பாஜகவுக்குத்தான் என் ஓட்டு : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 10:04 pm

டெல்லியில் ஆட்சியமைத்து வரும் ஆம்ஆத்மி கட்சி, அடுத்து பஞ்சாபில் முகாமிட்டு வெற்றியும் கண்டது. இதையடுத்து குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதனால், குஜராத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குஜராத்திற்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த 13 ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர்களுடன் கெஜ்ரிவால் கலந்துரையாடினார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டனி என்பவர், கெஜ்ரிவாலை தனது இல்லத்திற்கு உணவு அருந்த வருமாறு அழைத்தார்.

இதை ஏற்றுக்கொண்டு கெஜ்ரிவாலும் இரவு உணவு அருந்த சென்றார். இந்த செய்தி தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறின. ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் தண்டனியும் இதனால், அங்குள்ள மக்கள் மத்தியில் சற்று பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர் விக்ரம் தண்டனி கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது.

தலையில், காவி துண்டு அணிந்தபடி விக்ரம் தண்டனி மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதைக் கவனித்த ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பின.
மோடியின் பொதுக்கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள விக்ரம் தண்டனி, மோடியின் தீவிர ரசிகன் தான் என்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து விக்ரம் தண்டனி மேலும் கூறுகையில், ”நான் ஆட்டோ ஓட்டும் யூனியனில் உள்ள சிலர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் நான் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அழைத்தேன். நான் அழைப்பு விடுத்ததும் கெஜ்ரிவாலும் இதை ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இது இவ்வளவு பெரிய விஷயம் ஆகும் என நான் நினைக்கவில்லை. எனக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆம் ஆத்மியின் எந்த ஒரு தலைவர்களுடனும் நான் அதன்பிறகு தொடர்பில் இல்லை.

மோடியின் தீவிர ரசிகன் நான். அதன் காரணமாகவே நான் இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்தேன். ஆரம்ப காலத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே நான் வாக்களித்து வந்திருக்கிறேன். இதை சொல்ல எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை” என்றார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 579

    0

    0