சனாதன தர்மத்தை ஒழிப்பதே I.N.D.I.A கூட்டணியின் நோக்கம் : பிரதமர் மோடி கடும் தாக்கு!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 2:17 pm

மத்திய பிரதேசம் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி மாநில முழுவதும் பத்து புதிய தொழில்துறை திட்டங்கள் உட்பட ரூ.50,700 மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

மத்திய பிரதேசத்தில் மெட்ரோ கெமிக்கல் வளாகம், தொழிற்பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். மேலும், இந்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ரத்தலமில் மெகா தொழில் பூங்காவுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சி மூலமாக இன்றைக்கு மக்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு அளித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் நாட்டில் பல மாநிலங்களுக்கான பட்ஜெட் கூட ரூ.50,000 கோடியில் இருக்காது. ஆனால் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும். பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் அடையாளம் காணப்பட்டது. இந்த மாநிலத்தில் அதிக காலம் ஆட்சி செய்தவர்கள், ஊழல் மற்றும் குற்றங்களைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என குற்றசாட்டினார். ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது, இந்த வெற்றிக்கான பெருமை அனைத்தும் நாட்டு மக்களையே சேரும் என்றார்.

இதனைத்தொடர்ந்து, சனாதனம் விவகாரத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள். சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதல். யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே இருக்கும்.

இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விவேகானந்தர், லோகமான்ய திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது.

எனவே, சனாதனம் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு சனாதனியும் போராட வேண்டும். சனாதன தர்மம் தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கிறது. சனாதன தர்மத்தை காக்க வேண்டும்.

பல லட்சம் ஆண்டுகளாக உள்ள கலாசாரத்தையும், நம்பிக்கையையும் அழிக்க நினைக்கின்றனர். இது நம் நம்பிக்கை மீதான தாக்குதல். நாளை நம் மீதான தாக்குதல்களையும் அதிகப்படுத்துவார்கள்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ‘சனாதனிகளும்’ நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேச்சால் எழுந்த சனாதன சர்ச்சை விவகாரத்தில் பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார்.

ஏற்கனவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 398

    0

    0