‘இப்ப நாப்கின்… அப்பறம் காண்டம் கேட்பீங்களா..?’ பள்ளி விழாவில் பேசி சர்ச்சையில் சிக்கிய IAS பெண் அதிகாரிக்கு எழுந்த சிக்கல்..!!
Author: Babu Lakshmanan29 September 2022, 10:03 pm
பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பிய மாணவிக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பீகார் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர். இவர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, மாணவியிடம் பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த வீடியோவில் அதிகாரி கவுரை நோக்கி மாணவி ஒருவர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அதிகாரி ஹர்ஜோத் கவுர், “இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள். முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள்,” எனக் கூறினார்.
ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பேசிய இந்த சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியதாவது, “இந்த பிரச்சினை குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்தித்தாள்கள் மூலம் நான் இந்த விவகாரம் குறித்து அறிந்தேன். மாநில பெண்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உறுதி பூண்டுள்ளோம். ஐஏஎஸ் அதிகாரியின் நடத்தை இதற்கு விரோதமாக இருப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.
அதேவேளையில், எனது வார்த்தைகள் எந்த பெண்ணின் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், நான் யாரையும் அவமானப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ விரும்பவில்லை என்று கவுர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
0
0