கேரளாவுக்கு வருங்காலம் உண்டென்றால், அது எங்களால் மட்டும்தான் : பாஜக மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2022, 10:15 pm
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்றார்.
கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 26 விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. 9 விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டன. 17 விவகாரங்கள் பரிசீலனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. கேரளாவின் கோவளம் நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா, 2022-ம் ஆண்டு காமல்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை சந்தித்து உரையாடினார்.
இதன்பின்பு, கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நடந்த பா.ஜ.க. எஸ்.சி. மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, நாட்டில் இருந்து காங்கிரஸ் மறைந்து கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளில் இருந்து உலகம் விலகி செல்கிறது.
கேரளாவுக்கு வருங்காலம் உண்டென்றால், அது பா.ஜ.க.வாலேயே நடக்கும் என கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியோ, கம்யூனிஸ்டுகளோ ஒரு போதும் பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பணியாற்றியதில்ல. அவர்களை வாக்கு வங்கிகளாகவே பயன்படுத்தி வந்தனர் என கூறியுள்ளார்.