காங்., ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.. விவசாயிகளிடம் உத்தரவாதம் அளித்த ராகுல் காந்தி!
Author: Udayachandran RadhaKrishnan13 February 2024, 8:31 pm
காங்., ஆட்சிக்கு வந்தால் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை.. விவசாயிகளிடம் உத்தரவாதம் அளித்த ராகுல் காந்தி!
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய அரசு உத்தரவாதம் கொடுத்த நிலையில் பின்னர் திரும்ப பெற்றனர்.
எனினும், 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
விவசாயிகள் தங்களின் பேரணியை பஞ்சாப்பின் ஃபதேகர் சாஹேப்பில் இருந்து தொடங்கினர். விவசாயிகளின் இந்த பேரணி பஞ்சாப் – ஹரியானா, ஹரியானா- டெல்லி எல்லைகளைக் கடந்து டெல்லியை வந்து அடைய வேண்டும் என திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால், விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க டெல்லி எல்லையில், சிமெண்ட் தடுப்புகள், முள்படுக்கை, முள்வேலி போன்றவற்றைக் கொண்டு பாதைகளை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
டெல்லி அருகே உள்ள பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே டெல்லிக்கு சென்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 2000 டிராக்டர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 500 டிராக்டர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 200 டிராக்டர்கள் என சுமார் 3000 டிராக்டர்களுடன் டெல்லி எல்லைகளை விவசாயிகள் சுற்றிவளைத்து உள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் மட்டுமின்றி தென் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கேற்க டெல்லி சென்று உள்ளார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் அரசியல் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப்- ஹரியானா ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசினர்.
இதனால் விவசாயிகள் சிதறி ஓடினர். விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மேஜர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- விவசாய சகோதரர்களே இன்று வரலாற்றுப்பூர்வமான நாள்! சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின் படி ஒவ்வொரு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த முடிவு 15 கோடி விவசாய குடும்பங்களை வளமாக்கும். நீதிக்கான காங்கிரசின் பாதையில் இதுதான் முதல் உத்தரவாதம்” என்று பதிவிட்டுள்ளார்.