நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் : அரசியல் கட்சிகளை மிரள வைத்த காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 January 2023, 2:23 pm
வரும் தேர்தலில் நாங்கள் ஜெயித்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள்.
ஆளும் பா.ஜ.க ஜனசங்கல்ப யாத்திரை என்ற பெயரில் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதேபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ‘ஜன த்வனி’ (மக்கள் குரல்) என்ற பெயரில் பஸ் யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது. பெலகாவியில் இருந்து இந்த பயணம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பயணத்தை தொடங்கியுள்ளனர்.
முதல் நாளில் சிக்கோடியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசும்போது, இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். மக்களின் பிரச்சினைகள், வலிகள், வேதனைகள், கருத்துகளை அறியும் பொருட்டு நாங்கள் இந்த மக்கள் குரல் பயணத்தை தொடங்கியுள்ளோம்.
உங்களுக்கு பலம் கொடுக்கவும், உங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.
1924-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்று சுதந்திர போராட்டத்தை நடத்தினார்.
நாங்கள் அதே இடத்தில் இருந்து தான் இந்த பஸ் பயணத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் போருக்கு புறப்பட்டுள்ளோம். காந்தியின் கிணற்று நீரை எடுத்து அதை நிலத்தில் ஊற்றி துடைத்துவிட்டு, இந்த அரசு துடைத்தெறியப்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்று வந்துள்ளோம்.
இந்த பயணத்தின்போது 5 முக்கியமான வாக்குறுதிகளை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். அதில் முதல் வாக்குறுதி என்னவென்றால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் தலா 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். சொன்னபடி நடந்து கொள்வோம். கடந்த காலங்களில் நாங்கள் அவ்வாறு நடந்து கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.