‘இனி அரசு பேருந்துகளில் சத்தமாக பேசக்கூடாது, பாட்டு கேட்க கூடாது’: கேரள அரசு அதிரடி உத்தரவு..!!
Author: Rajesh20 February 2022, 11:51 am
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ கூடாது என கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக கேரளாவில் அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாகப் பேசுவது, அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, பாடல்கள் அல்லது வீடியோக்களை சத்தமாகப் பார்ப்பது, இதனால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.
இந்நிலையில் நேற்று கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி இனி கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க, வசதியாக இந்த அறிவிப்பினை அனைத்து பேருந்துகளின் தகவல் பலகையில் இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.