மூன்றே வருடத்தில் 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பு? ஆர்ஜேடி, காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்தார் நிதிஷ்!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 11:36 am
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் ஜேடியு கூட்டணி ஆட்சி உள்ளது. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதே போல கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
அதே போல ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் பாஜக ஆதரவோடு நிதிஷ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்டது
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்த நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினார்.
இண்டியா கூட்டணியில் 28 கட்சிகள் இருந்த போதிலும், நிதிஷை தேடி தலைமை பதவி வந்தபோதும் கூட அதை அவர் ஏற்க மறுத்தார்.
பீகார் சட்டப்பேரவையில் அதிகபட்சமாக ஆர்.ஜே.டி.க்கு 79, பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனாலும் 45 எம்எல்ஏக்களைக் கொண்ட நிதிஷ்குமாரே முதலமைச்சராக தொடர்கிறார். ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கூட்டணிக்கு 114 எம்எல்ஏக்களின் ஆதரவே இருக்கும். 243 பேரைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இன்று பிற்பகல் பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் சமர்ப்பிக்க உள்ளார். அப்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். பாஜகவின் உயர்மட்டக் குழு கூட்டம் பட்னாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் மூத்த தலைவர்கள் ரவி சங்கர் பிரசாத், ஷாநவாஸ் ஹுசைன், வினோத் தாவ்டே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான 122 உறுப்பினர்களில் லாலுபிரசாத் யாதவ்வின் RJD கூட்டணிக்கு 7 உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் எண்ணிக்கையை பெற, ஜித்தன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, அசாஸ்சுதீன் ஒவைசியின் AIMIM உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற RJD முயற்சித்து வருகிறது.
பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டாலும் ஆட்சியில் தொடருவதற்கான பணிகளில் RJD ஈடுபட்டுள்ளது. ஆர்ஜேடிக்கு 79 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 19 எம்எல்ஏக்களும், இடதுசாரி கட்சிகளுக்கு 16 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் பின்னர், பாஜக கூட்டணியை முறித்து ஆர்ஜேடி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 3வது முறையாக கடந்த 4 வருடத்தில் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.