திமுகவுக்கு ட்விஸ்ட் வைக்கும் இண்டியா கூட்டணி..புதிய கட்சி வருகை : கிடைச்சது சிக்னல்?!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2023, 1:58 pm

திமுகவுக்கு ட்விஸ்ட் வைக்கும் இண்டியா கூட்டணி..புதிய கட்சி வருகை : கிடைச்சது சிக்னல்?!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் மைசூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக – பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் 5 வதாக “2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்களின் ஒற்றுமை ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் எஸ்டிபிஐ கட்சி குறிப்பிட்டு உள்ளதாவது, “எதேச்சதிகார மற்றும் தீவிர வலதுசாரி பாசிச ஆட்சியின் கீழ் நமது தேசத்தின் அடித்தளமான ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆட்சியின் ஊழல் மற்றும் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் பேசியதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

நேர்மையாகப் பேசும், எழுதும் ஊடகங்கள் ஏஜென்சிகளால் ரெய்டு செய்யப்படுகின்றன.பத்திரிகையாளர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள். ஆளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், அவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியேயும் இழிவான, பாரபட்சமான மற்றும் இனவாத மொழியைப் பயன்படுத்துவதில் வெட்கப்படுவதில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ 2.69 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஏழைகள் மற்றும் விவசாயிகள் வேலையின்மை, வங்கி பொறுப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரல் வளர்ச்சி அல்ல, மாறாக வகுப்புவாத வெறுப்புதான். ஆகவே, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் தடுக்க, அனைத்து சமூகங்கள், மக்கள் மற்றும் சிறிய அல்லது பெரிய கட்சிகளை உள்ளடக்கிய பரந்த அடிப்படையிலான கூட்டணி ஒன்றுபட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.

தற்போது 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன. இதில் இஸ்லாமிய கட்சிகளை பொறுத்தவரை மமக தமிழ்நாடு அளவில் இயங்கக்கூடியது.

முஸ்லிம் லீ, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வலுவாக உள்ளது. இந்த நிலையில் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் கிளை பரப்பி இருக்கும் எஸ்டிபிஐ கட்சி சிறிய அல்லது பெரிய கட்சிகளை உள்ளடக்கிய பரந்த அடிப்படையிலான கூட்டணி ஒன்றுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைவதற்கான விருப்பமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!