ஐ-போன் ஹேக் விவகாரம்… குடும்ப வளர்ச்சியை பார்ப்பவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி பிடிக்காது : மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
31 October 2023, 10:06 pm

எதிர்கட்சி எம்பிக்களின் ஆப்பிள் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்கள், எம்பிக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என இந்தியாவில் 6 நபர்களின் ஐபோன் மற்றும் மின்னஞ்சல்களை ஹேக் செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அந்தந்த நபர்களுக்கு இ-மெயில் செய்துள்ளது.

அதன்படி, சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா மற்றும் தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசின் உதவியோடு செயல்படும் ஹேக்கர்கள் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது :- காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளார் கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளார் பவன் கெரா ஆகியோரின் செல்போன்கள் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும், பாஜக இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல என்று கூறிய அவர், உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ ஒட்டுக்கேட்டுக் கொள்ளுங்கள் என்றும், வேண்டுமென்றால் என் போனைத் தருவதாக கூறினார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்திருப்பதாவது :- இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக பார்க்கிறது. தாங்கள் ஆட்சியில் இருந்த போது தங்கள் குடும்ப முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்ட சிலருக்கு நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாது. சுமார் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஆப்பிள் இத்தகைய குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது. ஆனால், நடந்தது என்ன என்பது குறித்து அந்நிறுவனமே தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. முன்னர் ஒருமுறை இதே போன்ற நடந்தது. ஆனால், அனைத்தும் ஆய்வுக்கு பிறகு பொய் எனத் தெரிய வந்தது, எனக் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ