ஐபிஎல் பெட்டிங்… போட்டிக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை : 46 லட்சம் ரொக்கத்துடன் போலீசிடம் சிக்கிய 4 பேர்!!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2023, 2:29 pm
ஹைதராபாத் உப்பளில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் கிரிக்கெட் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் கிடைத்தது.
புகார் அடிப்படையில் போலீசார் வீடு ஒன்றில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கிரிக்கெட் சூதாட்டம் நடத்தப்படுவது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த 11 பேரில் 7 பேர் தப்பி ஓடிவிட்டனர். நான்கு பேரை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 46 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 12 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் இருப்பதற்கான ஆவணங்கள், 15க்கு மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். நான்கு பேரையும் கைது செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.