அந்தரங்க போட்டோக்கள் லீக்கான விவகாரம்.. பொதுவெளியில் அரசு அதிகாரிகள் மோதல்…. உடனே ஆக்ஷன் எடுத்த மாநில அரசு..!!
Author: Babu Lakshmanan21 February 2023, 5:07 pm
பொதுவெளியில் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து மோதிக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்நாடகாவின் கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக இருப்பவர் ரூபா ஐபிஎஸ். அண்மையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கர்நாடகா அரசின் அறநிலையத்துறை ஆணையர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பல்வேறு ஊழல்களில் ரோகிணிக்கு பங்கிருப்பதாக கூறிய அவர், கோலார் பகுதியில் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி ரவியின் இறப்பிற்கும், ரோகிணிக்கும் தொடர்பிருக்கிறதா என்று கொளுத்தி போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ரூபா, ரோகிணி சிந்தூரி கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் 3 ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி இருப்பதாகவும், இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் புகார் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் இந்தக் குற்றச்சாட்டுக்களால் கடுப்பான ரோகிணி, ரூபா பகிர்ந்த புகைப்படங்கள் அனைத்தும் எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், நான் எந்தெந்த அதிகாரிகளுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பினேன் என பெயரை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெண் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் மாறிமாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பொதுவெளியில் சண்டையிட்ட குற்றத்திற்காக ரோகிணி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.