முழு நேர அரசியலில் குதிக்கிறாரா பிரபல நடிகர்? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காங்கிரஸ் கட்சி?!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2023, 8:08 pm
இந்தியாவில் அரசியலையும், திரையுலகத்தையும் பிரித்து பார்க்கவே முடியாத சூழல் உள்ளது. பிற மாநிலங்களில் நடிகர், நடிகைகள் எம்எல்ஏக்களாகவும், எம்பிக்களாவும் உள்ளனர். கூடுதலாக அதிர்ஷ்டம் அவர்களுக்கு கைக்கொடுக்கும்பட்சத்தில் நடிகர், நடிகைகள் மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பதவியையும் எட்டிபிடிக்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இன்னும் ஒருபடிக்கு மேலாக திரையுலகத்தை சேர்ந்தவர்கள் முதல் அமைச்சர்களாகவும் ஆகி உள்ளனர். திமுகவின் அண்ணா, கருணாநிதி, அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலிலும், திரையுலகிலும் வெற்றி பெற்றவர்கள். இவர்கள் 4 பேரும் மக்கள் செல்வாக்கில் முதல் அமைச்சர்களாக அரியனையில் அமர்ந்துள்ளனர்.
இதுதவிர விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கி எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். சமத்துவ மக்கள் கட்சி தலைவராக உள்ள சரத்குமார் எம்எல்ஏவாக இருந்தவர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி அரசியலில் கால்பதித்துள்ளார். பாக்கியராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் பெயரில் கட்சி துவங்கினார்.
திமுகவில் எம்எல்ஏவாக இருந்த டி ராஜேந்தர் அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை துவங்கினார். நடிகர் கார்த்திக் அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியில் இணைந்த பிறகு 2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி ஜொலிக்காமல் போனார்.
மேலும் நெப்போலியன் எம்பி, எம்எல்ஏவாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். ராதாரவி, கருணாஸ் ஆகியோர் எம்எல்ஏவாகவும் இருந்துள்ளனர். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸில் ராஜ்யசபா எம்பியாக இருந்த தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை துவங்கி ஜொலிக்காமல் போனார்.
இதுதவிர நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராம், பாடலாசியர் சினேகன் உள்பட இன்னும் பல பிரபலங்கள் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் மாநில கட்சிகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் ஏராளமான அரசியல் பிரபலங்கள் உள்ளன. அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் ஏராளமான திரைபிலங்களில் அரசியலில் நுழைந்துள்ளனர்.
இதுதவிர பல நடிகர்கள் தங்களின் நட்பு, பழக்கம்வழக்கங்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்தலில் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது அவருக்கு ஆதரவாக முன்னணி நடிகர்களான தர்ஷன், கேஜிஎப் புகழ் யாஷ் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். அதேபோல் நடிகர் சுதீப்பும் காங்கிரஸ், பாஜகவினருக்கு ஆதரவாக நட்பின் அடிப்படையில் பிரசாரம் செய்துள்ளார். இந்த வரிசையில் தான் தற்போது கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சுதீப் காங்கிரஸ் கட்சிக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தி மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் சுதீப்பை அரசியலுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பான விஷயம் வெளியே கசியமால் மிகவும் ரகசியமாக காக்கப்பட்டு வரும் நிலையில் நடிகை ரம்யா மூலம் சுதீப்பிடம் முதற்கட்டமாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கூட காங்கிரஸ் கட்சியில் இணைவது அல்லது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது உள்ளிட்டவை பற்றி சுதீப் தற்போது வரை பதில் எதுவும் சொல்லவில்லையாம்.
இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவாரா? இல்லையா? என்பது தற்போது கர்நாடகா திரையுலகில் மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. தற்போது வரை சுதீப் தரப்பில் இருந்து அரசியல் சார்ந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால இந்த கேள்விக்கான விடையை அறிய நாமும் சில காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.