விரலில் உள்ளது மோதிரம் இல்லையா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் முதலமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan7 July 2022, 5:17 pm
எப்போதும் எளிமையாக தோற்றம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர் திடீரென மோதிரம் அணிந்திருந்தது சர்ச்சையான நிலையில் புதிய விளக்கத்தை அவரே கொடுத்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதும் மஞ்சள் நிற சட்டை, வெள்ளை பேண்ட், பையில் ஒரு பேனா ஆகியவற்றுடன் எப்போதும் எளிமையாக காட்சியளிக்கும் தலைவர் ஆவார்.
ஆனால் இந்த நிலையில் சமீப காலமாக அவருடைய இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரம் ஒன்று காணப்படுகிறது. இதுவரை மோதிரம், தங்க சங்கிலி ஆகி உள்ளிட்ட எவ்விதமான ஆபரணங்களையும் அணிந்த நிலையில் காணப்படாத சந்திரபாபு நாயுடு தற்போது மோதிரம் ஒன்றுடன் காணப்படுவது கட்சி தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது..
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமருவதற்காக ஜோசியர்கள் சொன்ன அறிவுரையின்படி அவர் மோதிரம் அணிந்து இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மதன பள்ளியில் நடைபெற்ற தெலுங்கு தேச கட்சியின் மினி மகாநாடு நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு அந்த மோதிரம் பற்றிய உண்மையை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் இது மோதிரம் கிடையாது. என்னுடைய உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் ஹெல்த் மானிட்டர். இந்த கருவி நான் சாப்பிடும் நேரம், எத்தனை மணி நேரம் தூங்கினேன், எத்தனை தூரம் நடந்தேன், எத்தனை நேரம் ஓய்வெடுத்தேன் என்பது பற்றிய என்னுடைய நடவடிக்கைகள் பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் என்னுடைய உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது, ரத்த அழுத்தம் எப்படி உள்ளது ஆகியவை உள்ளிட்ட என்னுடைய உடல்நிலை தொடர்பான தகவல் அனைத்தையும் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும்.
கட்டுப்பாட்டை அறையில் கிடைக்கும் தகவல்களை என்னுடைய மனைவி புவனேஸ்வரி கவனித்து அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை எனக்கு தொலைபேசி மூலம் தெரிவிப்பார்.
இதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மைக்ரோ சிப் போன்று இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ளது என்று அப்போது கூறினார். மேலும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள்,தலைவர்கள் ஆகியோரும் தாங்கள் உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்று அப்போது கூறினார்.