ஜார்க்கண்டில் அரசியல் கூத்து : பதவி பறிபோகும் பயத்தில் கட்சி எம்எல்ஏக்களுடன் சொகுசு பேருந்தில் பறந்த முதலமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2022, 8:12 pm
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ., பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளதாக, தகவல் வெளியான நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜார்க்கண்டில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 30ல் வென்றது. காங்கிரஸ், 17 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஒரு தொகுதியிலும் வென்றன. இந்தக் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். பா.ஜ., 26 தொகுதிகளில் வென்றது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை தன் பெயரிலேயே ஹேமந்த் சோரன் பெற்றுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றமாகும். அதனால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என, கவர்னர் ரமேஷ் பைசிடம் பா.ஜ., சார்பில் மனு கொடுக்கப்பட்டது .
இது பற்றி தேர்தல் கமிஷனின் கருத்துக்களை கவர்னர் கேட்டிருந்தார். தேர்தல் கமிஷன் தன் பதிலை நேற்று கவர்னருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, மாநில கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்து கவர்னர் ரமேஷ் பைஸ் இன்று(ஆக.,27) அறிக்கை அனுப்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
0
0