ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் திடீர் கைது… அமலாக்கத்துறை அதிரடி ; ஆளுநரை சந்தித்து பதவி ராஜினாமா…!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 9:22 pm

நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் சட்ட விரோதமாக சுரங்கம் நடத்தி பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பும், முறைகேடுகளும் செய்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடந்த விசாரணையில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

அதன் அடிப்படையில் ஹேமந்த்சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனிடையே, வரும் 31ம் தேதி தனது வீட்டில் மதியம் 1 மணியளவில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால், அதனை அமலாக்கத்துறை ஏற்கவில்லை.

இதனிடையே, 27ம் தேதி ராஞ்சியில் இருந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விபரம் இல்லை. கடந்த 18 மணிநேரமாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மாயமாகி விட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரன் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். ஆனால், அங்கு ஹேமந்த் சோரன் உள்பட யாரும் இல்லை.

இருப்பினும், வீட்டில் 13 மணிநேரம் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சி உள்பட ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும், அவரது பிஎம்டபிள்யூ காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராஞ்சிக்கு வந்த ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து ராஞ்சியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதலமைச்சராக போக்குவரத்து அமைச்சராக உள்ள சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 343

    0

    0