கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு மும்முனை போட்டி… களத்தில் குதித்த மற்றொரு சீனியர்… காங்கிரசுக்கு புது நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 4:47 pm

கர்நாடகா முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா – டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவி வரும் நிலையில், மற்றொரு சீனியரும் இந்த ரேஸில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் கருத்துக்கணிப்புகளை பின்னுக்குத்தள்ளி, ஆளும் பாஜகவை தோற்கடித்து 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. அதற்கான பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.

ஆனால், பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியமைக்க தகுதி பெற்றாலும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்களின் கருத்துகள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி அடங்கிய தலைமைக்கு நேற்று விளக்கமளித்தது. அதோடு, முதலமைச்சர் யார் என்பது குறித்து வாக்கெடுப்பும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்தியில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கட்சியின் தலைவரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அவர் இறுதி முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இன்று மாலைக்குள் முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டிகே சிவகுமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:- தான் மிரட்டவோ அல்லது கலகம் செய்யவோ மாட்டேன். ஆனால் கர்நாடகாவில் அமோக வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கட்சியின் தலைமை ஒப்புக்கொள்ள வேண்டும். ‘கர்நாடகாவில் நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என்று உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று சோனியா காந்தி என்னிடம் கூறினார். நான் இங்கே அமர்ந்து எனது வழக்கமான பொறுப்பை செய்கிறேன். உங்களுக்கு அடிப்படை மரியாதை, கொஞ்சம் நன்றியுணர்வு இருக்க வேண்டும்.

யார் என்பதை ஒப்புக் கொள்ளும் மரியாதை அவர்களுக்கு இருக்க வேண்டும். நான் பிளாக்மெயில் செய்ய மாட்டேன். அது நான் அல்ல. நான் ஒரு குழந்தை இல்லை. நான் வலையில் விழ மாட்டேன், என்று டி.கே சிவக்குமார் கூறினார்.

இதனிடையே, சித்தராமையா நேற்று டெல்லி சென்றுள்ளார். இந்த சூழலில்,டிகே சிவகுமாரும் நேற்று டெல்லி செல்ல திட்டமிட்ட நிலையில், இறுதியில் அது ரத்தானது. இந்த நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதன்பேரில் அவர் இன்று டெல்லி செல்கிறார்.

சமயோசிதமானவராகவும், கடினமான காலங்களில் காங்கிரஸின் பிரச்சனைகளைத் தீர்ப்பவராகவும் கருதப்படுகிறார். அதேவேளையில், 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியை சிறப்பாக நடத்தி முடித்த அனுபவம் மிக்கவர் சித்தராமையா. எனவே, யார் கர்நாடக முதல்வர் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் இடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் 3வது நபரும் இணைந்துள்ளார். அதாவது, முன்னாள் துணை முதலமைச்சரான பரமேஷ்வருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் துமகூரு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கட்சி கொடி மற்றும் பரமேஷ்வர் உருவம் பொறித்த படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தியபடியும் சாலை வழியே ஊர்வலம் சென்றனர்.இதனால், காங்கிரசுக்குள் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!