நாளை வெளியாகும் கர்நாடகா தேர்தல் முடிவு… குமாரசாமிக்கு அடித்த ஜாக்பாட் ; பாஜகவுக்கு முட்டுக்கட்டை போட காங்கிரஸ் திட்டம்..!!
Author: Babu Lakshmanan12 May 2023, 9:58 pm
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவு இல்லாமல், பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகளில் சொல்லப்படுகிறது.
இதையறிந்த குமாரசாமி தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்று அறிவித்துள்ளார். அதாவது, ஐந்து வருடமும் நான் தான் முதல்வர், சுழற்சி முறையில் பதவி தர வேண்டும் என்று கேட்க கூடாது. முதல்வராக என்னை சுதந்திரமாக வேலை செய்ய விட வேண்டும். எனக்கு பிடிக்காத ஆட்களை அமைச்சராக்க சிபாரிசு செய்ய கூடாது. நீர்வளம், மின்சாரம், பொதுப்பணி துறைகள் என் கட்சிக்கு தான். ரெய்டு என்ற பெயரில் என் கட்சியினரை மிரட்ட கூடாது, என பல்வேறு கண்டிசன்களை போட்டுள்ளார்.
இந்த சூழலில், குமாரசாமியின் ஆதரவை பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, 110 முதல் 120 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை ரெசார்ட்டில் தங்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் 120 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் ரெசார்ட் அரசியல் வேண்டாம் என்ற முடிவில் உள்ளனர். இதையடுத்து, ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேவேளையில், பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை தக்க வைப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
0
0